கொனோரியா (gonorrhoea) என்றால் என்ன?

கொனோரியா என்பது நைசீரியா கொனோரியே என்று அழைக்கப்படும் பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய பாலுறவால் பரவும் நோய்த்தொற்று (STI) ஆகும்.


எனக்கு கொனோரியா (gonorrhoea) எப்படி ஏற்படுகிறது?


கொனோரியா உள்ளவருடன் நீங்கள் பெண்ணுறுப்பு வழி, குதம் அல்லது வாய்வழி உடலுறவு கொள்ளும்போது உங்களுக்கு கொனோரியா தொற்று ஏற்படும்.

ஒருவருக்கு எந்தவித கொனோரியா அறிகுறிகளும் இல்லையென்றாலும், அவரிடமிருந்தும் உங்களுக்கு கொனோரியா வரமுடியும்.

கொனோரியா கொண்ட பெண்கள் பிரசவத்தின்போது தங்களின் குழந்தைக்கு இந்த நோயை தரக்கூடும். இதனால் குழந்தைகளுக்கு
கடுமையான கண் தொற்று ஏற்பட்டு குழந்தை பார்வை இழக்க நேரிடலாம்.

பொது கழிப்பறைகள், பொது நீச்சல் குளங்கள் அல்லது மற்றவர்களுடன் தொடர்புகொள்வதன்மூலம் உங்களுக்கு கொனோரியா ஏற்படாது.

கொனோரியா (gonorrhoea) உடலுக்கு என்ன செய்கிறது?


தொண்டை, ஆசனவாய், சிறுநீர்க் கால்வாய் (சிறுநீர் பாதை), பெண்களின் கருப்பை வாய் மற்றும் கண்களில் கொனோரியா தொற்றை ஏற்படுத்தலாம்.

சிகிச்சையளிக்காவிட்டால், கொனோரியா தோல் மற்றும் மூட்டுகளில் தொற்றை ஏற்படுத்தும். மூளை சவ்வு காய்ச்சல் அல்லது வீக்கத்தைக்கூட கொனோரியா ஏற்படுத்தலாம். மூளை சவ்வு காய்ச்சல் என்பது மூளையின் பரப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.

பெண்களைப் பொறுத்தவரை கொனோரியா தீவிர தொற்றை ஏற்படுத்தி ஒரு பெண் கர்ப்பமாவதை இது தடுத்துவிடக்கூடும்.

கொனோரியா கொண்ட பெண்கள் பிரசவத்தின்போது தங்களின் குழந்தைக்கு இந்த நோயை தரக்கூடும். இதனால் குழந்தைகளுக்கு
கடுமையான கண் தொற்று ஏற்பட்டு குழந்தை பார்வை இழக்க நேரிடலாம்.

எனக்கு கொனோரியா (gonorrhoea) இருக்கிறதா என்று எனக்கு எப்படித் தெரியும்?


அதிகமான மக்களுக்கு கொனோரியா தொற்று தொடர்பான அறிகுறிகளோ அல்லது அடையாளங்களோ இருப்பதில்லை என்பதால் பெரும்பாலும் அவர்களுக்கு கொனோரியா இருக்கிறதா என்பது தெரியாது.

உங்களுக்கு கொனோரியா உள்ளதா என்பதை ஒரு சோதனைமூலம் கண்டுபிடிப்பதுதான் ஒரே வழி. இந்த சோதனை விரைவாகவும் எளிதாகவும் உங்கள் சிறுநீரை சோதனை செய்வதாகும்.

தொற்று ஏற்பட்டிருக்கும் பகுதியிலிருந்து ஒற்றியெடுத்து, அப்படி ஒற்றி எடுத்ததை சோதனை செய்து கொனோரியா உள்ளதா என்று கண்டறிவது மற்றொரு வழியாகும்.

கொனோரியா(gonorrhoea) வின் அறிகுறிகளும், அடையாளங்களும்

ஆண்களுக்கு
• சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது கடுப்பு ஏற்படும்
• ஆண்குறியிலிருந்து திரவம் வெளியேறும். அது பெரும்பாலும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக இருக்கும்
• விரைகளில் வீக்கமும் வலியும் இருக்கும்
• ஆண்குறியின் திறப்புப் பாகம் சிவப்பாக காணப்படும்
• குதத்திலிருந்து வெளியேறுதல் இருக்கும் அல்லது அசௌகரியமான உணர்வு இருக்கும்
• கண் தொற்று நோய்கள் ஏற்படும்

பெண்களுக்கு
• யோனியிலிருந்து வழக்கத்திற்கு மாறாக திரவம் வெளியேறும்
• யோனியில் இரத்தப்போக்கு ஏற்படும்
• சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும்
• இடுப்பு வலி ஏற்படும், குறிப்பாக உடலுறவில் ஈடுபடும்போது வலி ஏற்படும்
• குதத்திலிருந்து வெளியேறுதல் இருக்கும் அல்லது அசௌகரியமான உணர்வு இருக்கும்
• கண் தொற்று நோய்கள் ஏற்படும்

எனக்கு கொனோரியா (gonorrhoea) உள்ளது என்றால் நான் என்ன செய்வது?


• உங்கள் மருத்துவர் உங்களுக்கு மருந்து கொடுப்பார்.
• நீங்கள் உடலுறவு கொள்கின்றவரிடம் அல்லது உடலுறவு கொள்கின்றவர்களிடம் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறுங்கள். அவர்களுக்கு கொனோரியா இருந்தால் அவர்கள் உங்களுக்கு கொனோரியாவை மீண்டும் தரக்கூடும் அல்லது அவர்கள் பிறருக்கு கொனோரியாவை தரக்கூடும்.
• உங்களுக்கு கொனோரியா இருப்பதை யாரிடம் கூறவேண்டும் என்பதை முடிவு செய்ய உங்கள் மருத்துவர் உங்களுக்கு உதவுவார். அவர்களிடம் கூறவும் உங்கள் மருத்துவர் உங்களுக்கு உதவுவார்.
• கொனோரியாவுக்கான சிகிச்சை முடியும்வரை ஆணுறை உபயோகப்படுத்தியும்கூட நீங்கள் யாருடனும் உடலுறவு கொள்ளாதீர்கள்.

கொனோரியா (gonorrhoea) வுக்கு சிகிச்சை தர முடியுமா அல்லது குணப்படுத்த முடியுமா?


ஆண்டிபயாடிக் அல்லது நுண்ணுயிர் கொல்லிக்கான
ஒற்றை ஊசி மூலம் கொனோரியாவுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.

நீங்கள் வெளிநாடுகளில் இருந்திருந்தால் அந்த தகவலை உங்கள் மருத்துவரிடம் தவறாமல் தெரிவியுங்கள். ஏனெனில் சில வகையான கொனோரியாக்கள் ஆஸ்திரேலியாவில் பொதுவாக காணப்படுபவையல்ல. எனவே அவைகளுக்கு சிறப்பு மருந்து தேவைப்படலாம்.

கொனோரியா நோயிலிருந்து நீங்கள் குணமடைந்திருந்தாலும் உங்களுக்கு மீண்டும் கொனோரியா வரலாம்.

கொனோரியா (gonorrhoea) வருவதிலிரிருந்து நான் எப்படி என்னை பாதுகாக்க முடியும்?


• நீங்களும், நீங்கள் உடலுறவு வைத்திருப்பவரும் கொனோரியா குறித்த பரிசோதனையை செய்யுங்கள். நீங்கள் ஒருவருக்கும் மேற்பட்டவருடன் உடலுறவு வைத்திருந்தால் அல்லது நீங்கள் உடலுறவு வைத்திருப்பவர் பிறருடன் உடலுறவு கொள்கின்றவர் என்றால் நீங்கள் தொடர்ந்து இந்த சோதனையைச் செய்யுங்கள். அதிகமானவர்களுடன் நீங்கள் உடலுறவு வைத்திருக்கின்றீர்கள் எனில், கொனோரியா ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

• நீங்களும் நீங்கள் உடலுறவு கொள்கின்றவரும் கொனோரியாவுக்கு சிகிச்சைபெறுங்கள். அப்போதுதான் நீங்கள் ஒருவருக்கொருவர் அல்லது மற்றவர்களுக்கு கொனோரியாவை தொடர்ந்தும் தரமாட்டீர்கள்.

• யோனி, குதம் அல்லது வாய்வழி உடலுறவுகொள்ளும்போது ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள். நீங்கள் மற்றவர்களுடன் உடலுறவு கொள்கின்றவரெனில் நீங்கள் நீண்டகாலமாக உடலுறவு வைத்திருப்பவருடனும் ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள்

• புதிய நபரிடம் உடலுறவு கொள்ளும்முன்பு ஆணுறைகளைப் பயன்படுத்துவது குறித்து அந்த நபரிடம் பேசுங்கள்.

பிறருக்கு கொனோரியா(gonorrhoea) வை நான் தருவதில்லை என்பதை நான் எப்படி உறுதி செய்ய முடியும்?


• நீங்கள் உங்கள் சிகிச்சையை முடிக்கும்வரை, தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பதை உறுதி செய்யும்வரை ஆணுறை அணிந்தும்கூட யாருடனும் உடலுறவு கொள்ளாதீர்கள்.

• உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு தடவையும் ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக புதியவருடன் உடலுறவுகொள்ளும்போது ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள்.

• நீங்கள் ஒருவருக்கும் மேற்பட்டவருடன் உடலுறவு வைத்திருந்தால் அல்லது நீங்கள் உடலுறவு வைத்திருப்பவர் மற்றவர்களுடன் உடலுறவு கொள்கின்றவர் என்றால் நீங்கள் தொடர்ந்து இந்த சோதனையைச் செய்யுங்கள்.

இதுகுறித்த உதவி மற்றும் ஆலோசனையை நான் எங்கிருந்து பெற முடியும்?


நீங்கள் இவர்களிடமிருந்து உதவி பெறலாம்:

• மருத்துவர்
• பாலியல் சுகாதார மருத்துவமனை
• சமூக சுகாதார சேவைகள்
• குடும்ப திட்டமிடல் மையங்கள்

மேலதிகத் தகவல்கள்