‘ஈரல் அழற்சி ‘பி’’ (hepatitis B) என்பது என்ன?
ஒரு வைரஸின்(நுண்ணுயிர்) பெயரும் அது தோற்றுவிக்கும் நோயின் பெயரும்தான் ‘ஈரல்அழற்சி ‘பி’’ என்பதாகும்.
ஈரல் அழற்சிக்கான நுண்ணுயிர் ‘பி’ உங்கள் ஈரலுக்கு நோயை ஏற்படுத்துகிறது. அதிகளவில் மது அருந்துவதாலும்; அதைப்போல், போதைவஸ்துகள், சில இரசாயனப் பொருட்கள் மற்றும் ஏனைய நுண்கிருமிகள் போன்றவற்றாலும் இது ஏற்படலாம்.
உங்கள் ஆரோக்கியத்திற்கு உங்கள் ஈரல் மிக முக்கியமானதாகும். அது பாதிக்கப்படும்போது அது சரிவர செயற்படாது என்பதுடன் உங்களை மிகவும் நோய்வாய்ப்படுத்தலாம்.
‘ஈரல் அழற்சி ‘பி’’ சிலவேளைகளில் “ஹெப் பி” என அழைக்கப்படும்.
‘ஈரல் அழற்சி ‘பி’’ எப்படி எனக்கு ஏற்படுகிறது?
‘ஈரல் அழற்சி ‘பி’’ உள்ள ஒருவரின் இரத்தம் அல்லது பாலியல் திரவங்கள் உங்கள் இரத்த ஓட்டத்தில் சேரும்போது உங்களுக்கு ஈரல் அழற்சி பி நோயானது கடத்தப்படுகிறது. பார்க்க இயலாத அளவிற்கு மிகவும் சிறியளவில் இரத்தமோ அல்லது பாலியல் சுரப்புநீரோ இருந்தாலும்கூட உங்களுக்கு ‘ஈரல் அழற்சி பி’ வரலாம்.
குழந்தைகள் மற்றும் இளம் சிறுவர்களுக்கு
- குழந்தை பிறந்தவுடன் உடனடியாக தடுப்பூசி ஏற்றப்படாவிட்டால் ‘ஈரல் அழற்சி பி’ உள்ள ஒரு தாய் அதனைத் தனது குழந்தைக்குக் கொடுக்கலாம்.
- கட்டுப் போட்டு மூடப்படாத வெட்டுக்காயங்கள், புண்கள் ஊடாகத் தடுப்பூசி கொடுக்கப்படாத இன்னொரு குழந்தைக்கு ‘ஈரல் அழற்சி ‘பி’’ உள்ள ஒரு குழந்தை அதைக் கொடுக்கலாம்.
வயதுவந்தோருக்கு
பின்வருவனவற்றிலிருந்து உங்களுக்கு ‘ஈரல் அழற்சி ‘பி’’ வரலாம்:
- ஆணுறை இல்லாமல்,பெண்ணுறுப்பு, மலவாசல் அல்லது வாய்வழியான பாலுறவு
- தேனீர்கரண்டிகள் உள்ளடங்கலாக ஊசிகள், மருந்தேற்றும் ஊசிகள் அல்லது வேறுவகையான ஊசியேற்றும் கருவிகளைப் பகிர்ந்துகொள்ளல்
- சுத்தமில்லாத கருவிகளால் பச்சைகுத்திக் கொள்ளல் அல்லது உடலைத் துளைத்தல்
- பல் துலக்கிகள், சவரக்கத்திகள், அல்லது நக அரம் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளல்
- மருந்தேற்ற ஊசி விபத்து அல்லது தொற்றுள்ள இரத்த சிந்தல்
இவற்றிலிருந்து உங்களுக்கு ‘ஈரல் அழற்சி ‘பி’’ வராது:
- கட்டியணைத்தல்
- முத்தமிடல்
- உணவு அல்லது உண்ணும் பாத்திரங்களைப் பகிரல்
- ‘ஈரல் அழற்சி ‘பி’’ உள்ள ஒருவர் தயாரித்த உணவை உண்ணுதல்
- பூச்சி அல்லது மிருகக் கடிகள்
- வியர்வை
- துணிமணிகளைத் துவைத்தல்
- தும்மல் அல்லது இருமல்
- குளியலறை அல்லது கழிவறைகளைப் பகிரல்
- நீச்சல் தடாகங்கள்
‘ஈரல் அழற்சி ‘பி’’ எனக்கு இருக்கிறதாவென எப்படி எனக்குத் தெரியும்?
அடையாளமோ அல்லது நோய் அறிகுறியோ அநேகமானோருக்கு இருக்காது மற்றும் நோய்வாய்ப்பட்டதாக உணரமாட்டார்கள். இரத்தப் பரிசோதனையொன்றினைச் செய்வதுதான் உங்களுக்கு இந்த நோய் இருப்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரேயொரு வழியாகும்.
‘ஈரல் அழற்சி ‘பி’’ உங்களுக்கு வரும்போது, உங்களுக்கு இவை ஏற்படலாம்:
- வாந்தி
- காய்ச்சல்
- உணவருந்த விருப்பின்மை
- கறுத்த சிறுநீர்
- ஈரல் வலி (வலது விலா எலும்புகளுக்குக் கீழே)
- மூட்டுக்களில் வலி
- மஞ்சள் நிறக் கண்கள் மற்றும் தோல் (மஞ்சள் காமாலை)
எனது உடம்பிற்கு ‘ஈரல் அழற்சி ‘பி’’ என்ன செய்யும்?
உங்கள் ஈரல் கலன்களுக்குள் ‘ஈரல் அழற்சி ‘பி’’ கிருமி போய் அதனைப் பாதிக்கும். ஈரலிலுள்ள நுண்கிருமிகளுடன் போராட உடல் மிகவும் பாடுபடும். இந்தப் போராட்டம் ஈரலைப் பாதிப்பதுடன் பல ஆண்டுகளின் பின்னர் ஈரல் செயல்படுவதை நிறுத்திவிடலாம்.
வயதுவந்தோர் அநேகமானோரில், பீடிக்கப்பட்டு 6 மாதங்களில் ‘ஈரல் அழற்சி பி’’ கிருமியை உடல் ஒழித்துவிடும். பின்னர் உங்களுக்கு இந்த நோய் மீண்டும் வராது.
ஆனால், இளம் சிறுவர்கள் மற்றும் சில வயதானோரின் சரீரத்தால் இந்த நோயுடன் போரிட முடியாது, ஆகவே ‘ஈரல் அழற்சி ‘பி’’ கிருமி வாழ் நாள் முழுவதும் சரீரத்தில் தங்கியிருக்கும். இது ‘தீராத ஈரல் அழற்சி ‘பி’’ எனப்படும், மற்றும் ஈரல் பாதிப்பையும், ஈரலில் தழும்பையும் (ஈரலரிப்பு), ஈரல் புற்றுநோயையும் இது ஏற்படுத்தும். மருந்துகளால் ஈரல் பாதிப்பைக் குறைக்கவும், ஈரல் புற்றுநோயைத் தடுக்கவும் இயலும்.
எனக்கு ‘ஈரல் அழற்சி ‘பி’’ இருந்தால் நான் என்ன செய்யவேண்டும்?
நீங்கள் சுகமாக இருப்பதாக உணர்ந்தாலும், ஒவ்வொரு ஆறிலிருந்து பன்னிரண்டு மாதங்களுக்குள் நீங்கள் உங்கள் வைத்தியரைக் கட்டாயம் பார்க்கவேண்டும். உங்களுக்கு சுகவீனம் ஏற்பட்டால், அது ஏற்கனவே உங்களுக்கு ஈரல் பாதிப்பு இருப்பதனால் ஏற்படுவதாகும்.
இரத்தப் பரிசோதனை போல் ஈரலில் ஏற்பட்டுள்ள கண்டல்களை மதிப்பிடும் பரிசோதனை ( Fibroscan) ஒன்றினை உங்கள் வைத்தியர் செய்யலாம் ஈரலில் தழும்புகள், அல்லது ஈரலுக்கு ஏதேனும் பாதிப்பு மற்றும் அது எவ்வளவு மோசமாக உள்ளதென்பது வைத்தியருக்கு தெரியவரும். இச் சோதனை ஈரலை ஊடுருவிப்பார்க்கும் ஒரு கதிர்ப்படப் பரிசோதனையாகும். உங்களுக்கு மருந்து தேவையா அல்லது ஈரல் சிகிச்சை நிலையத்திற்குப் போகவேண்டுமா அல்லது ஒரு சிறப்பு ஈரல் வைத்தியரை நீங்கள் பார்க்கவேண்டுமா என்பதை வைத்தியர் பின்னர் தீர்மானிப்பார்.
‘ஈரல் அழற்சி ‘பி’’ க்கு சிகிச்சை செய்யமுடியுமா அல்லது அதைச் சுகப்படுத்தலாமா?
ஆம், ‘ஈரல் அழற்சி ‘பி’’ க்குச் சிகிச்சை உண்டு.
ஆனால் ‘ஈரல் அழற்சி ‘பி’’ உள்ளோர் அனைவருக்கும் சிகிச்சை தேவையில்லை. உங்களுக்கு மருந்து தேவையானால் உங்கள் வைத்தியர் உங்களுக்குச் சொல்லுவார்.
‘ஈரல் அழற்சி ‘பி’’ யை மருந்தால் குணப்படுத்த முடியாது. ஆனால், உங்கள் ஈரலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தும், ஈரல் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை இது குறைப்பதுடன் தானாகவே ஈரல் சுகம்பெற இது உதவும்.
உங்களுக்குச் சிறந்த மருந்து எதுவென்பதைப் பற்றி உங்கள் வைத்தியருடன் கலந்துரையாடுங்கள்.
எனது ஈரலுக்கு நான் எவ்வாறு உதவலாம்?
- மதுவைக் குறைவாக அருந்துங்கள் அல்லது முற்றாகவே அருந்தாதீர்கள்.
- அதிகளவு கொழுப்பற்ற, ஆரோக்கியமான, சமநிலை போசனம் அருந்துங்கள்
- புகைபிடித்தலைக் குறையுங்கள் அல்லது நிறுத்துங்கள்
- தவறாமல் உடற்பயிற்சி செய்யவும்
- உங்கள் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், ஆதரவுதவியைப் பெறவும்
- மூலிகை மருந்துகள், உயிர்ச்சத்துக்கள்(வைட்டமின்கள்), அல்லது சீன நாட்டு மருந்துகள் எடுப்பீர்களானால் உங்கள் வைத்தியரிடம் அதைச் சொல்லவும். இவற்றில் குறிப்பாகச் சிலவற்றை அதியளவிலோ அல்லது நீண்ட காலமாகவோ எடுப்பீர்களானால் அது உங்கள் ஈரலைப் பாதிக்கலாம்.
- ஏனைய தொற்றுக்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் உங்கள் ஆரோக்கியத்தை இவை பாரதூரமாகப் பாதிக்கலாம் மேலும் அதிகளவு ஈரல் பாதிப்பை ஏற்படுத்தலாம்:
_ ‘ஈரல் அழற்சி ‘ஏ’’ க்கான தடுப்பூசியைப்
போட்டுக்கொள்ளுங்கள்
_ போதைவஸ்துவை உட்செலுத்துவதற்காக
ஊசிகளையோ அல்லது தேக்கரண்டிகளையோ
பகிர்ந்துகொள்ள வேண்டாம்
_ ஆணுறைகளை உபயோகிக்கவும்
‘ஈரல் அழற்சி ‘பி’’ எனக்கு வருவதை அல்லது இன்னொருவருக்கு அதைக் கொடுப்பதை எவ்வாறு நான் தவிர்க்கலாம்?
தடுப்பூசி
‘ஈரல் அழற்சி ‘பி’’ பரவுவதைத் தடுப்பதற்கு தடுப்பூசிதான் சிறந்த வழியாகும்.
அது மிகவும் பாதுகாப்பானதுடன் 95% காலத்திற்கும் மேலாக உங்களைப் பாதுகாக்கிறது.
உங்கள் வயதைப் பொறுத்து 6 மாத காலத்தில் 2 அல்லது 3 ஊசிமருந்தை நீங்கள் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
அவுஸ்திரேலியாவில், 1 வயதுக்குக் குறைந்த எல்லாக் குழந்தைகளும் 6 மாத காலத்தில் 4 இலவச ஊசிமருந்தைப் பெறுகிறார்கள். குழந்தையாக இருந்தபோது தடுப்பூசி கொடுக்கப்படாத 10 வயதிற்கும் 13 வயதிற்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி சிபாரிசு செய்யப்படுகிறது. தாய்க்கு ‘ஈரல் அழற்சி ‘பி’’ இருந்தால், குழந்தை பிறந்து பன்னிரண்டு மணித்தியாலந்திற்குள் ஒரு மேலதிக ஊசி அக் குழந்தைக்குக் கொடுக்கப்படுகிறது. இது குழந்தைக்கு ஒரு சிறந்த பாதுகாப்பைக் கொடுக்கிறது. குழந்தைகளுக்கு 9 மாதங்கள் ஆகும்போது, ‘ஈரல் அழற்சி ‘பி’’ -யால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் பரிசோதிக்கப்பட வேண்டும்.
இன்னொருவருவருக்கு ‘ஈரல் அழற்சி ‘பி’’ யைக் கொடுப்பதைத் தவிர்க்க:
- உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தடுப்பு மருந்து பெற்றுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
- ஆணுறைகளைப் பாவியுங்கள்
- வரண்ட குருதி உட்பட இரத்தம் காணப்படக்கூடிய பல் துலக்கிகள், சவரக்கத்திகள் அல்லது மற்றொருவருடைய சொந்தப் பொருட்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம்
- கையுறைகள் போட்டுக்கொள்ளாவிட்டால், வெளியாகத் தெரியக்கூடிய உங்கள் புண்களை ஏனையோர் தொட விடவேண்டாம்
- மருந்து ஊசிகள், ஊசிகள் அல்லது போதை ஊசி உபகரணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்
- இரத்தம், விந்து, உடல் உறுப்புக்கள் அல்லது உடல் திசுக்களைக் கொடுக்கவேண்டாம்
- நீங்கள் கர்ப்பவதியாக இருந்தால் அல்லது உங்களுக்கு ஒரு குழந்தை தேவையானால், உங்கள் குழந்தைக்குத் தேவைப்படும் தடுப்புமருந்து பற்றி உங்கள் வைத்தியருடன் பேசவும்
எனக்கு ‘ஈரல் அழற்சி ‘பி’’ இருந்தால் எவருக்காவது சொல்லவேண்டுமா?
- உங்கள் குடும்பத்தினர், உங்களுடன் வசிப்போர் மற்றும் உங்கள் பாலுறவுப் பங்காளிக்கு ( அல்லது பங்காளிகள்) நீங்கள் கட்டாயம் சொல்லவேண்டும். இதனால் அவர்களைப் பரிசோதித்து தடுப்பு மருந்து கொடுக்கலாம். இதைச் செய்வதற்கு உங்கள் வைத்தியர் உங்களுக்கு உதவுவார்.
- அவுஸ்திரேலிய இராணுவப் படையில் நீங்கள் சேர விரும்பினால், நீங்கள் கட்டாயம் அவர்களுக்குச் சொல்லவேண்டும்.
- உங்கள் காப்புறுதி நிறுவனத்திற்குச் சொல்லவேண்டும். சொல்லாது விட்டால், நீங்கள் நோயுற்றால் அல்லது காயமுற்றால் உங்களுக்கு அவர்கள் பணம் தராமல் விடலாம்.
- மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உங்கள் கைகளைப் பார்க்கமுடியாத ஒரு சுகாதாரப் பணியாளராக நீங்கள் இருப்பீராயின் (அறுவை வைத்தியர் அல்லது பல்வைத்தியர் போன்றவாராக), நீங்கள் கட்டாயமாக உங்களை வேலைக்கமர்த்தியவருக்கு அல்லது உங்கள் மேற்பார்வையாளருக்குச் சொல்லி சிறப்பு வைத்தியரிடமிருந்து ஆலோசனையைப் பெறவேண்டும்.
உங்கள் முதலாளி, உங்களுடன் வேலைசெய்பவர்கள் அல்லது படிப்பவர்கள் அல்லது நண்பர்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.
உங்களது பல்வைத்தியர் அல்லது வைத்தியர் போன்றோருக்குச் சொல்வது, அவர்கள் உங்களுக்குச் சிறந்த மருத்துவப் பராமரிப்பை வழங்குவதற்கு உதவும், ஆனால் இது உங்களது விருப்பத்திற்குரியதாகும். நீங்கள் அவர்களுக்குச் சொல்வதென முடிவுசெய்தால், அவர்கள் வேறு எவருக்கும் இதைச் சொல்லமாட்டார்கள்.
உங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய, உங்களுக்கு ஆதரவுதவியாக இருக்கக்கூடிய ஏனையோருக்குச் சொல்வதற்கும் நீங்கள் விரும்பலாம். நீங்கள் நம்பக்கூடியவர் யாரென யோசித்து முடிவுசெய்யுங்கள்.
உதவியையும், ஆலோசனையையும் எங்கே நான் பெறலாம்?
உங்களுக்கு ஆலோசனை மற்றும் உதவி வழங்கக்கூடிய ‘ஈரல் அழற்சி ‘பி’’ சமூகக் குழுக்கள் பல அவுஸ்திரேலியாவில் இருக்கின்றன.